Name:
Location: நாஞ்சில் நாடு, India

நாஞ்சிலன்

Sunday, March 05, 2006

முதலேடு

புதுச்சுவடியின் முதலேடு....

அங்கம், வங்கம், கலிங்கம், காம்போஜம், மாளவம், கூர்ச்சரம்,காஷ்மீரம், எனத் தொடங்கிச் சோழ, பாண்டிய மண்டலங்கள் வரை "அம்பத்தாறு" தேசங்களாய்ச் சிதறிக் கிடந்தவற்றை 'ஹிந்துஸ்தான்' என ஒன்றாக்கி ஆண்டவர்கள் முகலாய மன்னர்களே!
இறுதியாக அவர்களிடமிருந்துதான் ஆங்கிலேயன் 'இந்தியா'வைக் கைப்பற்றினான்.

நம் மாபெரும் தேசத்தைக் கட்டமைத்து, சட்ட நெறிமுறைகளையும் நிர்வாக முறைகளையும் உருவாக்கி, நிலவரி, மற்றும் பிற இன வருவாய் வகைகள் திரட்டிப் பங்கிடும் வழிகளையும் தந்தவர்கள் முகலாய மன்னர்களே என்பதை இன்று நம் நாட்டில் இருக்கும் வருவாய்த் துறை காட்டிக் கொண்டிருக்கிறது.

தாலுக், தாசில், மகஸுல், முன்ஸிஃப், போன்ற அரபுச் சொற்கள், ஜில்லா, பசலி, பர்வர்த்திகார் போன்ற உருதுச் சொற்கள் முகலாய மன்னர்கள் இந்நாட்டு நிர்வாகத்துக்குத் தந்தவையே. அவற்றைப் பற்றிப் பிறிதொரு வாய்ப்பில் பேசலாம்.

தமிழ் நாட்டில் தேர்தல் திருவிழா வந்துவிட்டது. இனிச் செவி பிளக்கும் பேரோசையில் ஒலிபெருக்கி வழியாக நம் அரசியல் தலைவர்களின் 'தெள்ளு தமிழ்ச் சொற்பொழிவு'கள் நம்மைத் தாக்கும்.

"தமிழே என் மூச்சு" என்றும் "அன்னைத் தமிழுக்காக இன்னுயிரைத் தருவேன்" என்றும் மேடைகளில் முழங்குகின்ற முது மூத்த தமிழ்க் காவலர்கள், தம் இல்லக் குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர்த்து இந்தி, ப்ரென்ச், ஜெர்மன் போன்ற மொழிகளைக் கற்க வாய்ப்பளித்து விட்டுப் பாமரன் முன்னே தமிழ் முழக்கம் செய்கின்ற தமிழினத் தலைவர்கள், குடும்பத்தவரிடையே தெலுங்கில் பேசிக் கொண்டு மேடைகளிலே தமிழுக்கும் உலகத் தமிழர்க்கும் தம் வாழ்வையே ஈயப் போவதாகச் சபதம் செய்யும் அரசியல் வாதிகள், மக்களின் பெயர்களையும் திரைப் படங்களின் பெயர்களையும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளையும் தமிழ்ப் படுத்துவதாகப் பெரும் ஆர்ப்பாட்டத்துடன் விளம்பரம் செய்யும் தமிழகத் தலைவர்கள் அனைவரும் மேடைகளில் வாரிக் கொட்டுகின்ற அத்தனைச் சொற்களும் தமிழ்ச் சொற்கள்தாமா?

நம் (தமிழ்) அரசியல்வாதிகளின் மொழிப் பற்றில் சற்று இங்குப் பார்ப்போமா?

தங்களது கழகத் தோழர்களை நகரின் 'மைதானம்' நோக்கி அழைப்பர்.

தேர்தலுக்காக நிதி ' வசூல்' செய்யும்படித் தம் தோழர்களை ஏவுவர்.

'அசல்' வக்காளர் பட்டியலை ' நகல்' எடுக்கும்படி உத்தரவிடுவர்.

தேர்தலில் போட்டியிட வேட்பு மனு 'தாக்கல்' செய்வர்.

வாக்கெடுப்பு நெருங்கி வந்தால் 'நபரு'க்கு இவ்வளவு எனத் தொகை தருவர்.

தேர்தல் நிதியில் 'பாக்கி' ஒன்றுமில்லை எனக் கைவிரிப்பர்.

எதிக் கட்சியினர் 'அத்து' மீறுவதாகக் குற்றம் சுமத்துவர்.

தாங்கள் தேர்தலில் வென்றால் எதிக்கட்சி வரிசை 'காலி'யாகவே இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிப்பர்.

தாம் அரியணையில் அமர்ந்ததும் பழைய சட்டங்களை 'ரத்து'ச் செய்து விட்டுப் புதிய சட்டங்களை 'அமுல்' படுத்துவோம் என்று உறுதியளிப்பர்.

எதிர்க் தரப்பினரின் குற்றச் சாட்டுக்குத் தகுந்த ' பதில்' உரிய நேரத்தில் தரப்படும் என்பர்.

ஊழல் வாதிகளுக்கு எதிர் தரப்பினர் 'வக்காலத்து' வாங்குவதாகக் கூக்குரலிடுவர்.

தம் தலைவரை 'நக்கல'டிப்பதாகக் கூப்பாடு போடுவர்.

தங்கள் மீதுள்ள குற்றச் சாட்டுகளை நிரூபிக்க முடியுமா எனச் 'சவால்' விடுவர்.

எதிர் 'தரப்பு' ஊழல் வாதிகளை நீதி மன்றத்தில் 'ஆஜர்'ப் படுத்துவோம் என்பர்.

திறமையான 'வக்கீல்' வைத்து வாதாடினாலும் அவர்களுக்கு 'வாய்தா' கூடக் கிடைக்காது எனக் கூறி எரிச்சல் மூட்டுவர்.


இவை அனைத்தும் அரபு மொழிச் சொற்கள்.


தேர்தல் நாள் நெருங்கும்போது வேட்பு மனுவை ' வாபஸ்' வாங்குவர்.

எதிர்க் கட்சியினர் 'பெட்டி பெட்டி'யாய்ப் பணம் இறக்குவதாகப் புலம்புவர்.

தாங்கள் தோற்றாலும் 'பரவாயில்லை' மக்கள் பணியிலிருந்து மாற மாட்டோம் என்று கூறி மன்றாடுவர்.

இவை உருது மொழிச் சொற்கள்.


இவர்கள் பயன்படுத்தும் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மொழி என்பது எண்ணங்களை வெளிப்படுத்தும் கருவி மட்டுமே. இன்றைய அறிவியல் உலகில் மொழிப் பற்று என்று பேசிக் கொண்டு மக்களை ஏய்த்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் உண்மையான வடிவைக் காட்டத்தான் இப்பதிவு.

வேற்றுமொழி--->தமிழ்
மைதானம்--->திடல்
வசூல்--->திரட்டல்
அசல்--->உண்மை
நகல்--->படி
தாக்கல்--->உள்ளிடல்
நபர்--->ஆள்
பாக்கி--->மீதி
அத்து--->எல்லை
காலி--->வெற்றிடம்
ரத்து--->விலக்கு
அமுல்--->நடைமுறை
பதில்--->மறுமொழி
வக்காலத்து--->சார்பாய் (நிற்றல்)
நக்கல்--->போலச் செய்தல்
தரப்பு--->அணி
சவால்--->அறைகூவல்
ஆஜர்--->வருகை
வக்கீல்--->வழக்குரைஞர்/ வழக்கறிஞர்
வாய்தா--->வாக்குறுதி
வாபஸ்--->திரும்பப் பெறல்
பெட்டி--->பேழை


4 Comments:

Blogger Jafar ali said...

அருமையான பதிவு!

5:01 AM, March 17, 2006  
Blogger புதுச்சுவடி said...

அபாபீல், ஜஃபர் அலீ,

தங்களிருவரின் வரவேற்பிற்கும் நன்றிகள்!

8:58 AM, March 19, 2006  
Blogger நல்லடியார் said...

நாஞ்சிலார்,

அருமையான தொகுப்பு. அரபியிலிருந்து ஆங்கிலம் உட்கொண்ட சொற்களைப் பற்றி என் பதிவிலும் எழுதி இருந்தேன். அவற்றில் சில:

admiral, alchemy, alcohol, alcove, algebra, algorithm, alkali, almanac, amalgam, aniline, apricot, arsenal, arsenic, artichoke, assassin, aubergine, azure, borax, cable, calibre, camphor, candy, cannabis, carafe, carat, caraway, checkmate, cipher, coffee, cotton, crimson, crocus, cumin, damask, elixir, gauze, gazelle, ghoul, giraffe, guitar, gypsum, hashish, hazard, jar, jasmine, lacquer, lemon, lilac, lime, lute, magazine, marzipan, massage, mattress, muslin, myrrh, nadir, orange, safari, saffron,sash, sequin, serif, sesame, shackle, sherbet, shrub, sofa, spinach, sugar, sultana, syrup, talc, tamarind, tambourine, tariff, tarragon, zenith, zero

http://athusari.blogspot.com/2005/10/blog-post_04.html

3:28 AM, November 30, 2006  
Blogger புதுச்சுவடி said...

வாங்க, வாங்க நல்லடியார்!

அதுசரி!( உங்கள் Blog பெயரில்லை: இது பொதுவான அதுசரி) முதலேட்டைத் திறக்க ஏன் இத்தனைத் தாமதம்?

இறையடியார்களுக்கு அறிவுரை சொன்னதால் நல்லடியார் முதலேட்டைத் திறந்துள்ளார் எனப் புரிந்து கொண்டேன்.

உங்கள் தொகுப்பும் சிறப்பாகவே உள்ளது.

வருகைக்கும் கருத்துச் சொன்னதற்கும் நன்றி! நன்றி

7:37 AM, November 30, 2006  

Post a Comment

<< Home