Name:
Location: நாஞ்சில் நாடு, India

நாஞ்சிலன்

Wednesday, January 16, 2008

வணிகன் புஷ்ஷின் வளைகுடாப் பயணம்

ந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திரமோடியைச்'"சாவு வணிகன்"(மவுத்க சவுதாகர்) என அடைமொழியிட்டு அழைத்தார்.அது மெத்தப் பொருத்தமானதே! மோடி இந்தியாவின் சாவு வணிகன் என்றால் புஷ், "அனைத்துலகச் சாவு வணிகன்".

தம் முன்னோடிகள் வியட்னாம், லாவோஸ், கம்போடியா எனச் செய்த சாவு வணிகத்தை அடியொற்றி, புஷ் ஆப்கானிஸ்தான், இராக் எனத் தொடர்கிறார். தம் வணிகத்துக்குப் புதிய சந்தையைத் தேடப் புறப்பட்டு வந்ததே புஷ்ஷின் வளைகுடாப் பயணம்.

இம்மாதம் 11ஆம் நாள் குவைத்தில் துவங்கி, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகங்கள் வழி நேற்று ஸவூதி அரேபியாவில் முடிந்தது புஷ்ஷின் வளைகுடாப் பயணம்.

(முஸ்லிம்களுக்கு எதிரான) சிலுவைப்போர் என ஆர்ப்பரித்து ஆப்கானிஸ்தானை அலங்கோலப் படுத்தி, பேரழிவு ஆயுதம் என அச்சுறுத்தி இராக்கை அழித்த புஷ்ஷின், 'கழுகு'ப் பார்வையில் அடுத்த குறி ஈரான்.

தம்மையும் அமெரிக்காவையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நெஞ்சுயர்த்தி அறைகூவல் விடுக்கும் ஈரான் அரசையும் அதன் அதிபர் அஹ்மதி நிஜாத்தையும் தனிமைப் படுத்தி ஈரானையும் ஒழித்துக் கட்டி விட்டால், உலகில் எதிர்ப்புக் குரலே இல்லாமல் அமெரிக்கா ஆட்டம் போடலாம் என்பது புஷ்ஷின் திட்டமாக இருக்கலாம்.

ஈரான் அதிபராக அஹ்மதிநிஜாத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அமெரிக்காவுக்கு முள் தைத்ததுபோல் உறுத்தியது. அண்மையில் கத்தர் நாட்டில் நடந்து முடிந்த வளைகுடா ஒத்துழைப்பு (GCC) நாடுகளின் மாநாட்டில், [வரலாற்றில் முதன் முறையாக ஈரான் அதிபர்] அஹ்மதுநிஜாத் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டது அமெரிக்காவின் உறுத்தலை அதிகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஸவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ்வின் அழைப்பை ஏற்று ஹஜ்ஜுக் கடமையை நிறைவு செய்ய ஒரு பெருங்குழுவுடன் அஹ்மதிநிஜாத் ஸவூதிக்குச் சென்று வந்தது, அரபு நாடுகளுடனான ஈரானின் நெருக்கத்தையும் ஷிய்யா-ஸுன்னி வேறுபாட்டையும் மீறிய நேசத்தையும் புலப்படுத்தியது. இதை அமெரிக்க அதிபராலும் அவரது குழுவாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இந்த ஒற்றுமையை உடைத்தலே உபாயம் எனப் புறப்பட்டு வந்தார் புஷ்.

இராக்கைத் தாக்கி அழித்த பயங்கரவாதத்துக்கெதிரான போரில் ( socalled war on terrorism)வளைகுடா நாடுகளைத் தம் பாடி வீடுகளக மாற்றினார் புஷ்.

பஹ்ரைன் நாடு கடற்படைத் தளமானது; கத்தர் விமானப் படைத் தளமானது; குவைத் தரைப்படைத் தளமானது; ஐக்கிய அரபு அமீரகங்கள் எரிபொருள் நிரப்பும் தளமானது.அதே முறையில் இப்போது ஈரானைத் தாக்க இத்தளங்களின் பயன்பாட்டை உறுதிபடுத்தவே புஷ்ஷின் பயணம்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இராக்கில் சென்றிறங்கி முகம் கிழிக்கப்பட்டது போல இம்முறை நடந்து விடக் கூடாது என்பதில் புஷ்ஷும் அவரது அறிவுரைஞர்களும் மெத்தவே அக்கறைப்பட்டனர். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என அமெரிக்க உளவாளிகள் தந்த அறிக்கையால் வேறு வழி தேடிய அவர்கள், புஷ் பயணம் துவங்கும் முன் ஒரு நாடகத்தை அரங்கேற்றினர்.

ஈரானை ஒரு "பாதுகாப்பு அச்சுறுத்தல் நாடு"(threat to security) என உலக நாடுகளின் முன் வெளிப்படுத்த ஹோர்முஸ்ஸில் (HORMUZ) அமெரிக்கப் போர்க் கப்பல்களை ஈரானின் படகுகள் வழிமறித்துக் குண்டுகள் வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டியதாக அமெரிக்கா அழுது புலம்பியது.

சிறு நகரங்கள்போல் நகரும் வலிமையான பெரிய மூன்று அமெரிக்கப் போர்க்கப்பல்களை ஈரானின் சிறிய ஐந்து விரைவுப் படகுகள் வழிமறித்துக் குண்டுகள் வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டினவாம் :-) இதுதான் பாதுகாப்பு அச்சுறுத்தலாம்.

"எங்கள் கடல் எல்லையில் வழக்கமாக நடைபெறும் நிகழ்வு; நாங்கள் கப்பல்களின் அடையாளத்தை(IDENTITY)க் கேட்பதும் அவர்கள் தம் அடையாளத்தைச் சொல்வதும் சாதாரண நடைமுறைதான். அப்படித்தான் இப்போதும் நடந்ததே தவிர நாங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டவில்லை என்பதை எங்களின் நாடாப் பதிவுகள் உறுதிப் படுத்தும்" என ஈரான் தன் பக்கத்தைத் தெளிவாக்கியது.

தொடர்ந்து சொந்த மக்களையே பொய்கூறி ஏமாற்றுவதற்காக அவர்களிடம் புஷ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் ஈரான் அறிக்கை விட்டிருக்கிறது.

ஈரானின் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் அமெரிக்காவின் கப்பற்படைப் பேச்சாளர் (Naval spokesman Rear Admiral Frank Throp IV), 'எங்கள் நாடாவில் பதிவான குண்டு மிரட்டல் வேறு புலத்திலிருந்தும் வந்திருக்க வாய்ப்புண்டு' என்று கூறிவிட்டார்.அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக, உலகம் அமெரிக்காவின் அழுகுணி ஆட்டத்தைப் புறக்கணித்து விட்டது.

எனினும் திட்டமிட்டபடி புஷ் வந்தார். புஷ்ஷின் வளைகுடாப் பயணத்தின் நோக்கம்:-

  1. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்தால், அமெரிக்காவுக்கு வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பை யாசிப்பது.
  2. ஈரானுக்கு அரபுலகம் அளித்து வரும் ஆதரவை முறிப்பது.
  3. வளைகுடாப் பகுதியில் ஈரானின் செல்வாக்கை ஒழிப்பது.
வளைகுடா வட்டாரத்துக்கு அச்சுறுத்தலான( regional threat) ஈரான், ஹிஸ்புல்லாஹ், ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் ஆகிய இயக்கங்களுக்குக் கோடிக்கணக்கான பணம் தந்து வளர்ப்பதாகக் குற்றம் சாட்டிய புஷ், மக்களாட்சியையும் உண்மையான விடுதலையையும் வெறுக்கும் இத்தீவிரவாதிகள் இஸ்லாமின் உன்னதத்தை அச்சுறுத்திக் கடத்திவிட்டதாக(hijak)கூறினார்.

புஷ் தம் ஆசையை வெளிப்படுத்தினார். ஆனால் அரபுகளின் ஆவலான, இராக் மறு சீரமைப்பு, பாலஸ்தீன முழு விடுதலை போன்றவற்றைப் பேசவில்லை.

ஈரானால் வளைகுடா வட்டாரத்துக்கு ஆபத்து எனில் நாங்கள் ஈரானுடன் பேசித் தீர்த்துக் கொள்வோம் எனத் தெளிவாக அறிவித்துவிட்ட வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் ஈரான் அழிப்புத் திட்டத்திற்கு ஒத்துழைக்கும் என்பது ஐயமே!

எனினும் புஷ் (அமெரிக்கா) இஸ்ரேலைத் தூண்டிவிட்டு ஈரானைத் தாக்கித் தன் சாவு வணிகத்தைத் தொடரும் வாய்ப்புண்டு.இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவின் மேல் சினமுறா; மாறாக இஸ்ரேலைக் கட்டுப்படுத்த அமெரிக்காவையே நாடும் என்பதும் ஓர் அரசியல் விளையாட்டே!

இராக், அடுத்து ஈரானையும் ஒழித்து விட்டால் வளைகுடா நாடுகளை எதிர்ப்பே இல்லாமல் எளிதில் வளைத்துவிடலாம் என்பது அமெரிக்காவின் தொலைநோக்குத் திட்டம். ஏனெனில் அவர்களின் குறி எண்ணெய்யே!

9 Comments:

Blogger ╬அதி. அழகு╬ said...

எல்லாமும் எண்ணெய் விளையாட்டுதான்.

4:20 AM, January 17, 2008  
Blogger அழகப்பன் said...

சிறப்பான கட்டுரை. நன்றி.

"(அமெரிக்காவின்) மத்திய மேற்கு (Midwest) மாநிலத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் அதற்கான தீர்வை மத்திய கிழக்கில் தேடு" என்றொரு சொல்வழக்கு அமெரிக்க அரசியலில் உண்டு. அமெரிக்காவில் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் ஏற்படும்போதெல்லாம் அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்கள் இதன்படியே செயல்பட்டனர்.

முன்னாள் அதிபர் நிக்சன் மீது ஊழல் புகார் எழுந்தபோது (1974), இதுபோன்று நான்கு அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேலுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

கிளிண்டன் மீது அவரது ஆட்சியின் கடைசி ஆண்டில் (2000) குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, இஸ்ரேல் மற்றும் பாலத்தீனப் பிரதிநிதிகளை கேம்ப் டேவிட்டிற்கு அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனாலும் இத்தகைய செயல்பாடுகளால் அவர்களுடைய அரசியல் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. இவற்றிலிருந்து புஷ் பாடம் கற்கவில்லை. அவரும் மற்றவர்களைப் போன்று தோல்வியையே தழுவியுள்ளார் என்று அறியும்போது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.

5:15 AM, January 17, 2008  
Blogger நல்லடியார் said...

சர்வதேச சாவு வணிகன் புஷ்! அகில இந்திய சாவு வணிகன் மோடி!!க்கு இணையான சொல்லாடல்.

கூர்ந்த அரசியல் பார்வையுடன் எழுதப்பட்ட உங்கள் பதிவு, நிகழ்கால வளைகுடா நடப்புகளை கோடிட்டுக் காட்டுகிறது.

10:50 AM, January 18, 2008  
Blogger அபு முஜாஹித் said...

நல்ல ஆய்வு. எனினும் அமெரிக்காவின் குறி எண்ணெய் மட்டுமல்ல. எண்ணெய் வளமில்லாத பாக்கிஸ்தானும் இவர்களின் பட்டியலில் உள்ளது. ஆதிக்க சக்திகளுக்கு தலை வணங்காத இஸ்லாம் இங்கெல்லாம் இருப்பதுதான் இவர்களின் கண்ணை உறுத்துகிறது. புஷுக்கு துபாய் ஒரு மாதிரி இஸ்லாமிய நாடாக தெரியும்போது ஈரான் போன்ற நாடுகள் தீவிரவாதிகளாகத்தானே தெரியும்.

5:41 AM, January 19, 2008  
Blogger புதுச்சுவடி said...

அழகு அவர்களே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

*********

அழகப்பன் ஐயா!

உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு சரியே!

அமெரிக்காவில் மட்டுமின்றி, இந்தியாவிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. சில சிக்கல்கள் ஆட்சியாளர்களை நெருக்கும்போது, தலைநகர் மாற்றம், எல்லையில் படை குவிப்பு எனச்சில்லறை வேடிக்கை காட்டுவார்கள் இந்தியாவில்.

ஆனால் அமெரிக்கர்கள் அடுத்த நாட்டில் விளையாடுவார்கள்.

கீழே அபூமுஜாஹித் எழுதியுள்ள பின்ன்னூட்டத்திற்கான எனது கருத்தையும் படியுங்கள்

****
// எண்ணெய் வளமில்லாத பாக்கிஸ்தானும் இவர்களின் பட்டியலில் உள்ளது. ஆதிக்க சக்திகளுக்கு தலை வணங்காத இஸ்லாம் இங்கெல்லாம் இருப்பதுதான் இவர்களின் கண்ணை உறுத்துகிறது//

பாகிஸ்தானில் நுழைந்து அல்காய்தாவினரை வேடையாடப் போவதாக அமெரிக்கா கூறுகிறது.

எங்கள் எல்லை கடந்து வரும் அந்நிய நாட்டுப் படையினர் எமது எதிரிகளே எனப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இஸ்லாம் ஆதிக்கச் சக்திகளுக்கும் ஃபாஸிஸ்டுகளுக்கும் சிம்ம சொப்பனம்தான்.
*****
தமிழ்மணத்தில் நட்சத்திரப் புகழ்பெற்ற, வலைப்பூ வல்லுநர் நல்லடியார் அவர்களே!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

7:26 AM, January 19, 2008  
Blogger புலமாடன் said...

புஷ்ஷைச் சாவு வணிகன் என அழைத்தது சரியே!

இரண்டாயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான சாவு ஆயுதங்களை விற்பனை செய்ய வளைகுடாவுக்கு வந்த அவனைச் சாவு வணிகன் என அழைத்தது பொருத்தமே!

6:10 AM, January 20, 2008  
Blogger ஒளி said...

வளைகுடா நாடுகளின் இன்றைய யதார்த்த நிலையையும், அமெரிக்காவின் குள்ளநரித்தனத்தையும் மிகத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். அருமையான பதிவு.

2:30 AM, February 10, 2008  
Blogger புதுச்சுவடி said...

இறைவன் அருளே வருக!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

7:59 AM, February 10, 2008  
Blogger வணங்காமுடி said...

புதுச்சுவடிஐயா

நல்ல பதிவு

9:50 AM, September 14, 2008  

Post a Comment

<< Home