புதுச்சுவடி

Name:
Location: நாஞ்சில் நாடு, India

நாஞ்சிலன்

Sunday, November 26, 2006

பதிவில் நேர்மை வேண்டும்

மூன்று பதிவுகள் போட்டால்தான் தமிழ்மணம் திரட்டுமாம்.

அதற்காக வேண்டி இந்த நேர்மையான பதிவு.

யாராவது இதைக் கயமைப் பதிவு என்று கயமைத் தனம் செய்தாலும் எனக்குக் கவலை இல்லை!

இறையடியார்களுக்கு...

இறையடியான் என்ற பெயரில் இணையத்தில் எழுதும் சகோதரர் ஒருவர் அண்மையில் இராமாயணம் பற்றிப் பதிவொன்று இட்டிருந்தார். இந்துத்துவ வெறியர்களின் பதிவுகளின் எதிர்வினைப் பதிவாக இருந்தாலும் அதில் இராமாயணத்தில் வரும் கதை மாந்தர்களின் பெயர்களையும் சில கதை நிகழ்வுகளையும் பொருத்தமற்று எழுதிக் குழப்பியிருந்தார்.

அதற்கு எதிர் வினையாக, ஜெயராமன் எனும் பதிவர் 'இஸ்லாமிய ராமாயணம்' என்ற தலைப்பில் ஒரு மறு கட்டுரை வெளியிட அதில் வழக்கம்போல் இந்துமதத் தீவிரவாதிகள் இஸ்லாமின் மீதும் முஸ்லிம்களின் உயிரினும் மேலான, அல்லாஹ்வின் தூதர் மீதும் புழுதியும் சேறும் வாரி வீசியிருந்தனர்.

இந்நிலை யாரால் ஏன் ஏற்பட்டது?

சிந்தித்துப் பார்த்தால் தவறு இறையடியான் என்ற வலைப் பதிவரிடம் என்பது புரியும்.

சினமோ சீற்றமோ கொள்ளாது காய்தல் உவத்தல் இன்றிச் சிந்தித்துப் பார்த்தால் என் கூற்றில் உள்ள உண்மை யாவருக்கும் புரியும்.

இராமாயணம் என்பது இந்தியாவின் சிறந்த காப்பியம். வால்மீகி இராமாயணம், துளஸி இராமாயணம், ஆனந்த இராமாயணம் போன்று கம்பன் எழுதிய இராமாயணம் தமிழ் மொழியின் மிகச்சிறந்த காப்பியம். அதன் மொழியழகும் கவிதைச் சிறப்பும் தமிழர்கள் யாவராலும் போற்றப் படும். இராமாயணத்தின் கதைப் பொருளின் மீது பகுத்தறிவாளர்கள், திராவிடர் கழகத்தினர், கிருத்துவர் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருக்கு மாற்றுக் கருத்தும் விமர்சனமும் இருக்கலாம். அதை வெளிப்படையாக எழுதவும் செய்யலாம். அதில் தவறில்லை. அல்லாஹ்வின் அருள் மறையையே விமர்சனத்துக்கு உள்ளாக்கும் உரிமை உள்ள இவ்வுலகில் ஓர் இலக்கிய நூலை விமர்சிப்பதில் தவறேயில்லை.

ஆனால் ஒரு நூலை விமர்சிக்கப் புகுமுன், குறைந்த அளவு அதன் உள்ளடக்கம் என்ன? அதன் கதை மாந்தர்கள் யாவர்? அவர்களுக்குள் என்ன உறவு அல்லது தொடர்பு என்பதையாவது அறிந்திருக்க வேண்டாமா? பள்ளிக் கல்வியிலேயே இராமாயணம் தேர்வுக்குரிய பாடமாக வைக்கப் பட்டுள்ளது. சாதாரண எட்டாம் வகுப்பு மாணவனுக்குத் தெரிந்திருக்கும் ஒரு தகவல் இணையத்தில் வலைப் பதிவு செய்யும் ஒருவருக்குத் தெரியவில்லை என்றால் நம்ப முடியவில்லை.

இறையடியான் எவ்வித ஆய்வும் தெளிவுமின்றிப் பதித்த ஒரு பதிவினால் தமிழ் முஸ்லிம்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கைபிசைந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வலையில் பதியும் இறையடியார்களே! உங்கள் சிந்தனைக்குச் சில..

இணையத்தில் ஓர் ஆக்கத்தைப் பதிவேற்ற எண்ணினால் அதற்கு முழு வடிவம் கொடுத்தபின் ஒரு முறைக்கு இருமுறை படித்து வேண்டிய திருத்தங்கள் செய்து பதிக்க வேண்டும். அதுவும் மேற்படியார் பதிந்துள்ளபடி விவாதத்துக்குரிய செய்திகளை மிகவும் கவனத்துடன் ஆதாரங்களைத் தேடிப் படித்துப் பின் பதிக்க வேண்டும். நாம் விமர்சிக்கப் புகும் நூலில் இருந்து அகச்சான்றுகள், அதற்கு வலுவேற்றும் புறச்சான்றுகள், பிற ஆய்வு நூலாதாரங்கள், வரலாற்று மற்றும் தொல்லியல், மானுடவியல் ஆதாரங்கள் இருப்பின் அவை என இப்படி எவையெல்லாம் நம் வாதங்களை வலுவேற்றுமோ அவை எல்லாம் தேடப்பட வேண்டும். சான்றாக, பாப்ரி மஸ்ஜித் விஷயமாக எழுதப் புகுந்தால் மேம்போக்காக எழுதாமல் மேற்சொன்ன அனைத்துவகைச் சான்றுகளையும் தரவுகளையும் தொகுத்து எழுதினால் அதன் பொலிவே தனிதான்.

ஆனால் அப்படி எந்த முயற்சியிலும் ஈடுபட்டதாக இறையடியானது எழுத்திலிருந்து புலப்படவில்லை. எந்த நூலையும் ஆய்வு நோக்கில் படித்து எழுதியதாகவும் தெரியவில்லை. எதோ ஒரு நூலை அவசரமாகப் படித்து அல்லது ஓர் ஒலிநாடாவைக் கேட்டு அல்லது கேட்டவர் சொல்லக் கேட்டு அவசரமாகப் பதித்து 'பேஸ்த்' ஆகி நிற்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

இதைத்தான், "தடி கொடுத்து அடி வாங்குவது" என்பர்.

"கழுத்துப் பிடி கொடுத்தாலும் எழுத்துப் பிடி கொடுக்கக் கூடாது." இவரது சறுக்கலை வைத்தே ஜல்லியடித்துள்ள கூட்டம் இதை மெய்ப்பித்துவிட்டது.

பிறர் கடவுளாக எண்ணி வணங்குபவர்களைத் திட்டாதீர்கள்; இதன் மூலம் அவர்கள் அறிவின்றி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் என்று அல்லாஹ் தன் அருள்மறையில் சொன்னதற்குச் சரியான சான்றாகி விட்டார் இறையடியான்.

ஒரு கருத்தைச் சொன்னால் எதிரி வாயடைக்கும் வண்ணம் சொல்ல வேண்டும்.

மாறாக, அரைகுறைச் செய்திகளுடன் பதிவிட்டால் இந்துத்துவ வெறியர்களிடம் இப்போது வாங்கிக் கட்டிக் கொண்டதைப்போல் வாங்க வேண்டிய நிலைமை வரலாம்.

நாம் விமர்சிக்கும் எதிரிகள் நம்மைவிடப் புத்திசாலிகள் என்ற எண்ணம் இருந்தால்தான் வாதங்களில் தெளிவும் வலுவும் ஏற்படும். மத்ஹபு, தர்கா, தரீக்கா என மேம்போக்காக வாதிடுவதுபோல் எண்ணி, அள்ளித் தெளித்த அவசரக் கோலம் அலங்கோலப் பட்டுவிட்டது.

எழுத்தில் சூடு இருப்பதை விடத் தேவையானது மறுக்கவியலா ஆதாரம். காளையொன்று கன்றீன்றது எனக் கூறக் கேட்டால் கறப்பதற்குச் சொம்புடன் ஓடக்கூடாது.

"நீங்கள் அறியாதவர்களாயிருந்தால் அறிந்தவர்களிடம் கேளுங்கள்" என்று அல்லாஹ் தன் அருள் மறையில் கூறுகின்றபடி, நீங்கள் எழுத விரும்பும் செய்தி பற்றி மேல் விபரங்களை, அதுபற்றி அறிந்தவர்களிடம் கேட்கலாம்; முழுவடிவம் கொடுக்கும் முன் அத்தகைய அறிஞர்களிடம் காட்டலாம்.

பொதுவாக இணைய விவாதங்களில் ஈடுபடுவதற்கு முன்னால் அந்தக் குறிப்பிட்ட தளம், மன்றம், அரங்கம் பற்றியும் அங்குள்ள விதிகள் பற்றியும் தெரிந்து கொள்வது நலம். இல்லையேல், மூக்கறுப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு விஷயத்தைப் பொதுவில் கொண்டு செல்லும் முன் இதனால் சமுதாயத்திற்கு ஏதேனும் நன்மையா என்பதை முதலில் சிந்தித்துப் பார்த்துவிடுவது நலம்.

இரண்டாவதாக, கொண்டு செல்லும் குறிப்பிட்ட அந்த இடமும் சூழ்நிலையும் அதற்கு ஏற்றவையா என்பதையும் முடிவு செய்யவேண்டும்.

எதிர்வினைகளை எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதோடு மட்டுமின்றி, அதற்கான நேரம் ஒதுக்கும் வாய்ப்பு தமக்கு இருக்கிறதா என்பதை முடிவு செய்த பின்னரே இதுபோன்ற விவாதங்களில் ஈடுபடுவது நலம்.

ஏதாவது ஓர் அறிஞரின் கருத்தைத் தம் ஆக்கத்தில் மேற்கோளிட்டுவிட்டு, எதிர்வினை வரும்போது இதற்கு நான் முழுதும் உடன்படவில்லை என்றோ அல்லது அந்த அறிஞரிடம்தான் கேட்க வேண்டும் என்றோ சொல்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளாமல், தாமே எதிர்வினைகளை எதிர்கொள்வதற்காக, உடன்பாடான, தெரிந்த நல்ல விஷயங்களை வெளிப்படுத்துவதே நல்லது.

இணையதளத்தில் இதன் குறிப்புகளோ அல்லது மூலமோ இருக்குமாயின், அவசியம் சுட்டி கொடுக்கப்பட வேண்டும்.

எழுத்துநடை எளிமையாகவும் தெளிவாகவும் அமைய வேண்டும். எனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டுவதற்காகப் பாமர வாசகனுக்கு எளிதில் புரியாத பெரிய பெரிய சொற்களைப் போட்டு மிரட்டக்கூடாது. கூறியது கூறல் கூடாது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும். அதற்காகக் குன்றக் கூறவும் கூடாது; மிகைப் படுத்தவும் கூடாது. சொல்ல வந்த செய்தியை விட்டுவிட்டு வேறொரு செய்திக்குத் தாவவும் கூடாது.

சுருங்கக் கூறின், ஓர் ஆக்கம் என்பது, 'மனித குலத்தின் மேன்மைக்கும் அமைதிக்கும் உரிய வழி'யின்அழைப்பாக இருக்க வேண்டும்.